Language
CRP பரிசோதனை என்றால் என்ன? அதைப் பற்றி அறியவேண்டிய அனைத்தும்.
Table of Contents
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை என்றால் என்ன?
- CRP பரிசோதனை எதற்காகச் செய்யப்படுகின்றது?
- நீங்கள் எதற்காக CRP பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
- CRP பரிசோதனை முறையை யார் செய்வார்?
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனைக்கு எப்படித் தயார் ஆகுவது?
- CRP பரிசோதனையின்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்?
- CRP பரிசோதனை முடிவுகள் மூலம் என்ன அறியலாம்?
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை செய்துகொள்வதினால் ஏற்படும் ஆபத்து என்ன?
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை முடிவுகள் கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனையில் கிடைக்கக்கூடிய முடிவுகள் யாவை?
- CRP பரிசோதனை முடிவுகளின் இயல்பான அளவு எவ்வளவு?
- அதிக CRP அளவு எதைக் குறிக்கிறது?
- குறைந்த CRP அளவு எதைக் குறிக்கிறது?
- எனது CRP அளவு இயல்பான வரம்பிற்குள் இல்லை என்பது கவலைக்குரியதா?
- முடிவுரை
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை என்பது, தற்போதைய நவீன சுகாதாரத்துறையிலுள்ள மிக முக்கியமான கண்டறிதல் கருவியாகும். CRP பரிசோதனை என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன, மற்றும் அதன் முடிவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வது தங்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தைப் பற்றி அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் முக்கியமாகும்.
இந்த விரிவான கையேட்டில், CRP பரிசோதனையின் நோக்கம், அதன் முடிவுகள் எதைக் குறிக்கின்றன, மற்றும் அது மருத்துவ நடைமுறையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை புரிந்துகொள்வோம்.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை என்றால் என்ன?
C-ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனையில், உங்கள் இரத்தத்தில் கல்லீரலால் உற்பத்திச் செய்யப்படும் ஒரு வகை புரோட்டீனான, C-ரியாக்டிவ் புரோட்டீனின் அளவு கணக்கிடப்படுகிறது. உடல் இன்ஃப்ளமேஷனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அதைச் சரிசெய்ய கல்லீரல் CRP ஐ உற்பத்தி செய்கிறது.
உங்கள் உடல் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது தீங்கான இரசாயனங்கள் போன்ற கேடு விளைவிக்கும் விஷயங்களை எதிர்கொள்ளும்போது, அல்லது உங்களுக்கு காயம் ஏற்படும்போது, அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படத் தூண்டுகிறது - அதாவது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் ஆரம்ப எதிர்வினைகளை வெளிப்படுத்துகிறது, இதில் இன்ஃப்ளமேஷட்டரி அணுக்கள் மற்றும் சைட்டோகைன்கள் உருவாகின்றன.
இந்த அணுக்கள் பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த அல்லது காயமடைந்த திசுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான செயல்முறையைத் தொடங்க இன்ஃப்ளமேஷட்டரி எதிர்வினையைத் தொடங்குகின்றன. இந்த எதிர்வினையானது வலி, வீக்கம், சிராய்ப்பு அல்லது சிவத்தல் போன்ற பார்க்கக்கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இன்ஃப்ளமேஷன் உங்கள் மூட்டுகள் போன்ற உள் உடல் அமைப்புகளையும் பாதிக்கிறது.
உடல்நலப் பிரச்சினை எதுவும் இல்லை என்றால், பொதுவாக உங்கள் இரத்தத்தில் குறைந்த அளவிலான CRP தான் இருக்கும். உங்கள் CRP அளவுகள் சற்று அதிகமாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்தால், உங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்கத் தொற்று பாதிப்பு அல்லது பிற இன்ஃப்ளமேஷட்டரி நோய்நிலைகளைக் குறிக்கலாம்.
CRP பரிசோதனை எதற்காகச் செய்யப்படுகின்றது?
CRP பரிசோதனையானது இரத்தத்தில் உள்ள C-ரியாக்டிவ் புரோட்டீனின் (CRP) அளவை கணக்கிட செய்யப்படுகிறது. இது நோய்தொற்று, தன்னுடல் தாக்கி நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற CRP பரிசோதனை செய்யப்படுவதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுகிறது.
CRP பரிசோதனையானது மேலே கொடுக்கப்பட்டுள்ள நோய்நிலைகளுக்குச் செய்யப்படும் CRP பரிசோதனை பாசிட்டிவ் சிகிச்சையை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிது. அத்துடன், CRP பரிசோதனையானது ஒரு நபர் இருதய நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை மதிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) அளவை அறிவதன் மூலம், மருத்துவர்கள் ஒருவருக்கு இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து, ஆபத்து ஏற்படுவதைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
நீங்கள் எதற்காக CRP பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
C-ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனை என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள CRP அளவை கணக்கிடும் ஒரு இரத்த பரிசோதனை ஆகும்.
இரத்தத்தில் உள்ள அதிக C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP),அளவானது உடலைப் பாதித்துள்ள தொற்று, தன்னுடல் தாக்கி நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நோய்நிலைகளால் ஏற்பட்டுள்ள இன்ஃப்ளமேஷனின் அறிகுறியாக இருக்கலாம்.
CRP பரிசோதனையானது இந்த நோய்நிலைகளைக் கண்டறிந்து கண்காணிக்கவும், அந்நோய் நிலைகளைக் குணப்படுத்த மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சையின் செயல்திறனைக் கண்டறியவும் உதவுகிறது.
CRP பரிசோதனை முறையை யார் செய்வார்?
பொதுவாக பயிற்சி பெற்ற மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரால் CRP பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிபுணர்கள் நோயாளியிடமிருந்து இரத்த மாதிரியைச் சேகரிக்கிறார்கள், பின்னர் இரத்த மாதிரி C-ரியாக்டிவ் புரோட்டீனின் (CRP) அளவை கணக்கிட மருத்துவ ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனைக்கு எப்படித் தயார் ஆகுவது?
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனைக்குத் தயாராவது மிகவும் எளிது - இப்பரிசோதனைக்கென்று குறிப்பிட்ட உணவு அல்லது வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை. பரிசோதனைக்கு முன் நீங்கள் எப்போதும்போல் உண்ணலாம் மற்றும் அருந்தலாம்.
இருப்பினும், சில மருந்துகள் உடலில் உள்ள CRP அளவை பாதிக்கக்கூடும் என்பதால், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் அல்லது சப்ளிமெண்ட் மருந்துகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும்.
CRP பரிசோதனையின்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்கு இரத்த பரிசோதனை செய்யும்போது அல்லது இரத்தமாதிரி எடுக்கும்போது:
- லேப் தொழில்நுட்ப வல்லுநர், உங்கள் கைகளில் உள்ள எந்த ரத்தநாளதிலிருந்து சுலபமாக இரத்த மாதிரியைப் பெற முடியும் என்பதைப் பரிசோதிக்கும்போது, நீங்கள் ஒரு நாற்காலியில் உட்காரலாம்.
- இரத்தமாதிரி எடுக்கப்படும் இடம் பொதுவாக உங்கள் முழங்கையின் மறுபக்கத்தில் கையின் உட்பகுதியில் இருக்கும்.
- இரத்தமாதிரி எடுப்பதற்கான இரத்தநாளத்தைக் கண்டுபிடித்த பிறகு, இரத்த மாதிரியை எடுக்க சிறிய ஊசி ஒன்றைச் செருகுவதற்கு முன்பு, லேப் வல்லுநர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்து கிருமிகளை நீக்குவர். இது சிறியக் கட்டெறும்பு கடித்ததுபோல இருக்கும்.
- டெஸ்ட் டியூபில் போதுமான இரத்தமாதிரி சேகரிக்கப்பட்டவுடன், வல்லுநர்கள் ஊசியை நீக்கி, அந்த இடத்தில் வழியும் இரத்தப்போக்கை காட்டன் பால் அல்லது காஸ் துணியைப் பயன்படுத்தி நிறுத்துவார்கள்.
- பின்னர் இரத்தமாதிரி எடுக்கப்பட்ட இடத்தில் பேண்டேஜ் போட்டுவிடுவார்கள். இந்த முழு செயல்முறையும் முடிக்க ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கும்.
CRP பரிசோதனை முடிவுகள் மூலம் என்ன அறியலாம்?
CRP பரிசோதனைக்குப் பிறகு நீங்கள் பெறும் முடிவுகள், உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள இன்ஃப்ளமேஷன் அளவைக் குறிக்கிறது. பின்னர் உங்கள் மருத்துவர், உங்கள் CRP அளவுகளின் அடிப்படையில், உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதைச் சரிசெய்வதற்கான தொடர் சிகிச்சைகள் குறித்து கலந்தாலோசிப்பார்.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை செய்துகொள்வதினால் ஏற்படும் ஆபத்து என்ன?
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை ஆனது பொதுவாக குறைந்தபட்ச ஆபத்தை மட்டுமே கொண்ட பாதுகாப்பான பரிசோதனையாகும். இருந்தாலும்கூட, இரத்தமாதிரி சேகரிக்கப்பட்ட இடத்தில் ஒரு சில நேரங்களில் தொற்று அல்லது இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான சிறிய ஆபத்து உள்ளது.
அரிதான நேரங்களில், சிலருக்கு பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். C-ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனைக்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதைப் பற்றித் தெளிவாகக் கலந்துரையாடுவது சிறந்தது.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை முடிவுகள் கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
உங்கள் C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனையின் முடிவுகளை ஓரிரு நாட்களுக்குள் அல்லது ஒரு வாரத்திற்குள் நீங்கள் பெறலாம். உங்கள் மருத்துவர் உங்களுடன் முடிவுகளைப் பற்றி கலந்தாலோசித்து, உங்கள் ஆரோக்கியத்தின் நிலை பற்றி நீங்கள் புரிந்துகொள்ள உதவுவார்.
C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனையில் கிடைக்கக்கூடிய முடிவுகள் யாவை?
CRP பரிசோதனை போன்ற இரத்த பரிசோதனைகளின் முடிவுகள் பின்வரும் விவரங்களை வழங்குகின்றன:
- இரத்த பரிசோதனையின் தலைப்பு அல்லது உங்கள் இரத்தத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பொருள்.
- உங்கள் இரத்த பரிசோதனையின் எண் மதிப்பு அல்லது முடிவுகள்.
- அந்தக் குறிப்பிட்ட பரிசோதனை முடிவுகளுக்கு இயல்பான வரம்பாகக் கருதப்படும் மதிப்புகள்.
- உங்கள் பரிசோதனை முடிவு இயல்பான வரம்பிற்குள் உள்ளதா, இயல்பற்றதாக உள்ளதா, அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை அறிகுறிகள் வெளிப்படுத்துகின்றன.
CRP பரிசோதனை முடிவுகளின் இயல்பான அளவு எவ்வளவு?
உங்கள் C-ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனை முடிவுகளைப் பெற்றவுடன், பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட லேப் பயன்படுத்தும் அப்பிரத்யேக CRP பரிசோதனைக்கான இயல்பு வரம்புப் பற்றியத் தகவலை அறிவீர்கள்.
பொதுவாக, உடலில் உள்ள CRP பரிசோதனை அளவு, டெசிலிட்டர் ஒன்றுக்கு 0.9 மில்லிகிராம்களுக்கு(mg/dL) குறைவாக இருக்கவேண்டும்.
உங்கள் உடலில் உள்ள C-ரியாக்டிவ் புரோட்டீன் அளவை பல காரணிகள் பாதிக்கலாம். CRP பரிசோதனை முடிவுகள் உங்கள் உடலுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நிலைகள் அல்லது சூழ்நிலைகளால் சற்றே அதிகரிக்கக்கூடும், அந்நிலைகள் அல்லது சூழல்கள் பின்வருமாறு:
- புகைபிடித்தல்.
- சாதாரண சளி.
- மனச்சோர்வு அறிகுறிகள்.
- நீரிழிவு.
- தூக்கமின்மை.
- ஈறு அழற்சி.
- உடல் பருமன்.
- பெரியோடோன்டிடிஸ்.
- கர்ப்பம்.
- சமீபத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள்.
கர்ப்பிணிப் பெண்களும், வயதானவர்களும் இயற்கையாகவே அதிக C-ரியாக்டிவ் புரோட்டீன் அளவை கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் முடிவுகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அவற்றை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க ஒருபோதும் தயங்க வேண்டாம்.
அதிக CRP அளவு எதைக் குறிக்கிறது?
CRP பரிசோதனை முடிவுகள் இயல்பான வரம்பைவிட மிதமானது முதல் அதிக அளவில் கூடுதலாக இருப்பின், உங்கள் உடல் ஏதோ ஒரு வகை இன்ஃப்ளமேஷனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், CRP பரிசோதனை முடிவுகள் இன்ஃப்ளமேஷனுக்கான காரணத்தையோ அல்லது அது பாதித்துள்ள இடத்தையோ துல்லியமாகக் கூறாது. அதனால், உங்கள் CRP பரிசோதனை முடிவுகள் அதிகமாக இருந்தால், நீங்கள் கூடுதல் பரிசோதனைகளை செய்துகொள்ள உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
CRP பரிசோதனையின் முடிவுகளானது, அதிக அளவைப் பொறுத்து மாறுபடலாம். டெசிலிட்டர் ஒன்றுக்கு 1.0 மற்றும் 10.0 மில்லிகிராம் (mg/dL) க்கு இடையில் ஓரளவு CRP அதிகரிப்பு இருப்பின், அது பின்வரும் நோய்நிலைகளைக் குறிக்கலாம்:
- முடக்கு வாதம் (RA), சிஸ்டமிக் லூபஸ் எரித்தமடோசஸ் (SLE) அல்லது பிற தானுடல் தாக்கி நோய் நிலைகள், இதய பாதிப்பு (மாரடைப்பு), கணைய இன்ஃப்ளமேஷன் அல்லது மூச்சுக்குழாய் இன்ஃப்ளமேஷன் போன்ற நிலைகளினால் ஏற்படும் சிஸ்டமிக் இன்ஃப்ளமேஷன்.
- 10 mg/dL க்கும் அதிகமான CRP புரோட்டீன் அளவு தீவிர பாக்டீரியா தொற்றுகள், வைரஸ் தொற்றுகள், சிஸ்டமிக் வாஸ்குலிடிஸ் அல்லது பெரியளவிலான காயம் (அதிர்ச்சி) ஆகியவற்றின் தாக்கத்தைக் குறிக்கிறது.
- 50 mg/dL க்கும் அதிகமான CRP புரோட்டீன் அளவு நிச்சயமாக 90% தீவிர பாக்டீரியா தொற்று பாதிப்பை உறுதிப்படுத்துகிறது.
குறைந்த CRP அளவு எதைக் குறிக்கிறது?
குறைந்த CRP (C-ரியாக்டிவ் புரோட்டீன்) அளவு உடலின் குறைவான இன்ஃப்ளமேஷன் நிலையைக் குறிக்கிறது. அதாவதுகுறைவான இன்ஃப்ளமேஷன் மட்டுமே உள்ளது அல்லது தொடர் இன்ஃப்ளமேஷன் நிலை உடலில் இல்லை என்பதைக் குறிக்கிறது, அத்தகைய பரிசோதனை முடிவுகள் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கின்றன.
ஆனாலும்கூட, குறைவான CRP அளவு எவ்வித உடல்நலப் பிரச்சினைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தாது எனபதை நினைவில் வைத்திருப்பது அவசியமாகும். அதனால், பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, விரிவான உடல்நல மதிப்பீடு செய்துகொள்வதற்கு உங்கள் மருத்துவரை அணுகுவது இன்றியமையாததாகும்.
எனது CRP அளவு இயல்பான வரம்பிற்குள் இல்லை என்பது கவலைக்குரியதா?
உங்கள் CRP பரிசோதனை முடிவுகள், சற்றே அதிகரித்த CRP அளவு உங்களுக்கு உள்ளதாக காட்டினால், உங்களுக்கு அவசியமாக சிகிச்சை தேவைப்படும் மருத்துவ நோய்நிலை இருக்கிறது என்று அர்த்தமில்லை, அதிலும் அளவு சற்றே அதிகமாக இருக்கும்பட்சத்தில்.
புகைபிடித்தல், அவ்வப்போது ஏற்படும் காயங்கள் மற்றும் குறிப்பிட்ட நோய் நிலைகள் போன்ற பல காரணிகள் அதிகரித்த CRP அளவை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமில்லாமல், C-ரியாக்டிவ் பரிசோதனை சேகரிப்பு, போக்குவரத்து அல்லது செயலாக்க பிழைகளாலும் அது ஏற்பட்டிருக்கக்கூடும்.
முற்றிலும் மாறுபட்ட பரிசோதனை முடிவுகள் வந்தால், உங்கள் மருத்துவர் பரிசோதனை கண்டுபிடிப்புகள் குறித்து உங்களுடன் கலந்தாலோசிப்பார், அத்துடன் உங்களின் C-ரியாக்டிவ் புரோட்டீனின் இயல்பற்ற அளவுக்கான முக்கிய காரணத்தைக் கண்டறிய கூடுதல் பரிசோதனைகளை செய்துகொள்ள அவர் பரிந்துரைக்கலாம்.
முடிவுரை
ஆக, C-ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனை என்றால் என்ன? C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை என்பது உடலில் ஏற்பட்டுள்ள இன்ஃப்ளமேஷனை மதிப்பிடுவதற்கான முக்கிய கருவியாகும், அத்துடன் பல்வேறு நோய் நிலைகளைக் கண்டறிதலிலும், கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற நேரங்களில், மெட்ரோபோலிஸ் அளிக்கும் C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP) பரிசோதனை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றிய தெளிவான தகவலை வழங்க உதவும்.
உங்கள் இரத்த CRP அளவைக் கண்காணிப்பது உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள இன்ஃப்ளமேஷன் மற்றும் உங்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலக் குறைபாடுகளை முன்கூட்டியே அடையாளம் காண உதவுகிறது, அதாவது உடனடி நோய் கண்டறிதல் மற்றும் அதற்கான சரியான சிகிச்சை வழங்கப்படுவதற்கு வழிவகைசெய்கிறது. மெட்ரோபோலிஸ் மூலம், உங்கள் நல்வாழ்வை சீராக பராமரிக்கவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் நீங்கள் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை முன்னதாகவே எடுக்கலாம். இந்த CRP ரியாக்டிவ் புரோட்டீன் பரிசோதனைக்கான முன்பதிவை ஆன்லைனிலேயே மெட்ரோபோலிஸில் செய்துகொள்ளலாம். எங்களது லேப் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் பரிசோதனை முடிவுகள் பெறுவதை உறுதிசெய்கிறது.
மெட்ரோபோலிஸ் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட NABL & CAP அங்கீகாரம் பெற்ற நோயறிதல் மையமாகும். அதனால், இன்றே உங்களுக்கு அருகிலுள்ள கிளைக்குச் சென்று தகவல்களை விசாரிக்கவும்.









