Do you have any queries?

or Call us now at 9982-782-555

back-arrow-image Search Health Packages, Tests & More

Language

ESR இரத்த பரிசோதனை: இயல்பான அளவு மற்றும் அதிக ESR அளவிற்கான காரணங்கள்.

Published On: Jun 19 2025
Last Updated On: Jun 19 2025

எரித்ரோசைட் செடிமென்டேஷன் ரேட் (ESR) பரிசோதனைகள் வழக்கமான இரத்த பரிசோதனைகளின் ஒரு பகுதியாக செய்யப்படுகின்றன. ESR பரிசோதனை என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் (RBCs) எவ்வளவு விரைவாக ஒரு டெஸ்ட்டியூப் அடியில் படிக்கின்றது என்பதை அளவிடுவதற்குப் பயன்படும் ஒருவகை பரிசோதனை ஆகும். பொதுவாக RBC க்கள் மெதுவாக அடியில் படியும் விகிதத்தைக் கொண்டவை. இருப்பினும் உங்கள் பரிசோதனை முடிவுகள், விரைவாக படியும் விகித முடிவைக் காட்டினால், அதாவது, அதிக ESR அளவுகள் இருந்தால், உங்கள் உடல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. அந்நோய்நிலையே அதிக ESR அறிகுறிகளாக வெளிப்படுகிறது.

அதிக ESR அளவுகள் எதனால் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், ESR பரிசோதனை என்றால் என்ன அது எப்படி பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

ESR பரிசோதனை என்றால் என்ன?

ESR என்பது “எரித்ரோசைட் செடிமென்டேஷன் ரேட்” என்பதின் சுருக்கமாகும். ESR இரத்த பரிசோதனை பொதுவாக “செட் ரேட் பரிசோதனை” எனவும் அறியப்படுகிறது. ESR பரிசோதனையில், உங்கள் இரத்தத்தில் உள்ள எரித்ரோசைட்கள் அல்லது சிவப்பு இரத்த அணுக்கள் எவ்வளவு விரைவாக ஒரு டெஸ்ட் டியூப் அடியில் படுகின்றன என்பது கணக்கிடப்படுகிறது. இவை உங்கள் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் அடியில் படிவதற்கு உதவும் குறிப்பிட்ட புரதங்களின் அளவை மறைமுகமாக அளவிடுகிறது. இத்தகைய புரதங்களின் அளவுகள் உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள இன்ஃப்ளமேசன் நிலை பற்றிய தகவலை வழங்குகிறது.

அதிக ESR அளவுகள் என்பது எதை உணர்த்துகிறது?

உங்கள் உடலில் நோய் பாதிப்பு அல்லது நோய்தொற்று ஏற்பட்டிருந்தால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நோய்தொற்றை எதிர்த்துப் போராட உடலைத் தூண்டுகின்றது. அதன் காரணமாக, உடலிலுள்ள ஒரு சில புரதங்களின் அளவு அதிகரிக்கிறது. இந்தப் புரதங்களின் அதிகரிப்பு, உங்கள் இரத்தத்தில் உள்ள RBCக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு மெதுவாக கீழே படிய வழிவகை செய்கின்றன. இதனால் சிவப்பு அணுக்களின் படியும் விகிதங்கள் அதிகரிக்கிறது. (Tishkowski, K. et al., 2022). அதிக ESR அளவு உள்ள பரிசோதனை முடிவுகள், உங்கள் உடல் தற்போது ஒரு நோயை அல்லது நோய்தொற்றை எதிர்த்துப் போராடுகிறது என்பதைக் குறிக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில நாள்பட்ட நோய்களுக்கு,

· இன்ஃப்ளமேசன் அதாவது அழற்சி நோய்கள்

· தன் உடல் தாக்கும் நோய்கள்

· நாள்பட்ட சிறுநீரக நோய்கள்

· ஆர்த்ரிடிஸ் அதாவது முடக்குவாதம்,

ESR பரிசோதனைகள் அந்நோயின் நிலை மற்றும் வளர்ச்சியைக் கண்காணிக்க பயன்படுகின்றன.

இருப்பினும், எரித்ரோசைட் செடிமென்டேஷன் ரேட்/ESR பரிசோதனை என்பது எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை இல்லை. ESR பரிசோதனை உடலில் இன்ஃப்ளமேசன் அதிகரித்துள்ளதா, அதன் விளைவாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க மற்ற பரிசோதனைகள் மற்றும் நோய் அறிகுறிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றது.

ESR பரிசோதனை செய்துகொள்ள எப்போது மருத்துவர் பரிந்துரைப்பார்?

உங்கள் மருத்துவர் உங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கருதினால், ESR பரிசோதனையைச் செய்துகொள்ள பரிந்துரைப்பார். இருப்பினும், ESR பரிசோதனைகள் வழக்கமான இரத்த பரிசோதனைகளின் ஒரு பகுதியாகும், எனவே அவற்றைத் தனியே செய்துகொள்ள வேண்டியதில்லை.

அதிக ESR அளவினால் ஏற்படும் அறிகுறிகள் யாவை?

இரத்தத்தின் அதிக ESR அளவு நோய்பாதிப்பு மற்றும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாகும். அதிக ESR அளவு பின்வரும் உடல் அறிகுறிகள் & நோய்களை உண்டாக்குகின்றன:

· தலைவலி

· காய்ச்சல்

· மூட்டு/தசைவலி மற்றும் விறைப்பு

· பசியின்மை

· இயல்பற்ற எடை இழப்பு/எடை அதிகரிப்பு

· அனிமீயா அதாவது இரத்தசோகை

இந்த அறிகுறிகளின் பட்டியல் விரிவானது அல்ல. அதிக ESR அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம் மற்றும் அவற்றை மருத்துவர் பரிசோதித்து கண்டறிவதே சிறந்ததாகும்.

இரத்தத்தின் இயல்பான ESR அளவுகள் எவ்வளவு?

அதிக ESR அளவுகள் இரத்தத்தில் உள்ள அதிக புரத அளவுகளைக் குறிக்கிறது, இதனால் RBC க்கள் ஒன்றுடன் ஒன்று விரைவாக ஒட்டிக்கொண்டு கட்டிகளாக மாறுகிறது.

ESR பரிசோதனையானது, டெஸ்ட் டியூபின் மேற்புறத்தில் உள்ள தெளிவான திரவத்திற்கும் (பிளாஸ்மா) ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் இரத்த சிவப்பணுக்களுக்கும் இடையிலான தூரத்தை மில்லிமீட்டர்களில் (மிமீ) அளவிடுகிறது. இயல்பான அளவுகள் பின்வருமாறு:

· 50 வயதுக்குக் குறைவான ஆண்களுக்கு 0 முதல் 15 மிமீ/மணிநேரம்

· 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 0 முதல் 20 மிமீ/மணிநேரம்

· 50 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு 0 முதல் 20 மிமீ/மணிநேரம்

· 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 0 முதல் 30 மிமீ/மணிநேரம்

அதிக ESR அளவு எதனால் ஏற்படுகிறது?

பல உடல் நிலைகளால் அதிக ESR அளவானது ஏற்படலாம். அதிக ESR அளவை ஏற்படுத்தும் பெரும்பாலனவை இன்ஃப்ளமேசன் நோய்களாக உள்ளன. ஏனென்றால், இத்தகைய நோய்கள் உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை துரிதப்படுத்தி, அதிக ESR ஆல் ஏற்படும் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சில பின்வருமாறு:

· இரத்தத்தைப் பாதித்துள்ள இன்ஃப்ளமேசன் நோய்தொற்றுகள், அதாவது சிஸ்டமிக் இன்ஃப்ளமேட்டரி நோய்தொற்றுகள். எலும்பு, இருதயம், சருமம், நுரையீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் நோய்தொற்றுகள் இதில் அடங்கும்.

· திசு காயம் அல்லது இஸ்கெமியா (இரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்ட திசுக்கள்)

· பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகள் மற்றும் விபத்துக்கள்

· லுகேமியா, மைலோமா, லிம்போமா போன்ற சில வகையான புற்றுநோய்கள்.

· நீரிழிவு நோய்

· இருதய நோய்

· சிறுநீரக நோய்

· · பெருந்தமனி தடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற இரத்தக்குழாய் நோய்கள்.

· உடல்பருமன்

· தைராய்டு நோய்

· ரூமேடிக் வாத காய்ச்சல்

· லூபஸ், ஆர்த்ரிடிஸ் போன்ற தன் உடல் தாக்கும் கோளாறுகள்.

இந்த நோய்களின் பட்டியல் விரிவானது அல்ல. பாலினம், மருத்துவ வரலாறு, மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் போன்றவற்றின் அடிப்படையிலான உடல் நிலைகளும் அதிக ESR அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

கருத்தடை மாத்திரைகள், வைட்டமின் A சப்ளிமெண்ட்டுகள், கார்டிசோன், மெத்தில்டோபா, குயினின் மற்றும் தியோபிலின் போன்ற மருந்து உட்கொள்ளுதலும் உங்கள் ESR பரிசோதனை முடிவுகளைப் பாதிக்கலாம்.

கர்ப்பம், வயது மூப்பு, மற்றும் இரத்தசோகை போன்றவையும் இரத்தத்தில் அதிக ESR அளவை ஏற்படுத்தலாம். எனவே, அதிக ESR அளவினால் ஏற்படும் அறிகுறிகள் ஏதேனும் நோய் பாதிப்பு அல்லது நோய்தொற்று காரணமாகதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதிக ESR அளவுகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ESR பரிசோதனையில் உங்களுக்கு அதிக ESR அளவு உள்ளதாக கண்டறியப்பட்டால், உங்கள் பிற பரிசோதனைகள், பாலினம், வயது, மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் துல்லியமான நோய்கண்டறிதல் செய்யும்வரை காத்திருக்கவும். உங்களுக்கு அதிக ESR அளவு இருப்பது மட்டுமே, உங்கள் உடலில் நோய் பாதிப்பு அல்லது நோய்நிலை இருப்பதற்கான துல்லியமான அறிகுறியில்லை .

உங்கள் மருத்துவர் சரியான நோய் கண்டறிதலைச் செய்திட, உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் நீங்கள் வழக்கமாக உட்கொள்ளக்கூடிய மருந்துகள் பற்றியத் தெளிவான தகவல்களை வழங்குவது அவசியம். ஏனென்றால், சில சப்ளிமெண்ட் மருந்துகள் உங்கள் ESR அளவை பாதிக்கக்கூடும். லேப்கள், பரிசோதிக்கப்பட்ட நபர் மற்றும் பாலினம் போட்ன்றவற்றைப் பொறுத்து ESR அளவுகளின் இயல்பான வரம்பு மாறுபடும்.

அது மட்டுமல்லாமல், ஓரளவு அதிகரித்த ESR அளவு, இன்ஃப்ளமேட்டரி நோய்களால் ஏற்படாமல், கர்ப்பம் அல்லது மாதவிடாயினாலும் ஏற்படலாம். எனவே, அதிகரித்த ESR அளவு இருப்பினும்கூட, சரியான பிரச்சனையைக் கண்டறிய உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது கட்டாயமாகும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிய உங்கள் மருத்துவர் இன்னும் சில பரிசோதனைகளை நீங்கள் செய்யும்படி பரிந்துரைக்கலாம்.

Talk to our health advisor

Book Now

LEAVE A REPLY

Your email address will not be published. Required fields are marked *

Popular Tests

Choose from our frequently booked blood tests

TruHealth Packages

View More

Choose from our wide range of TruHealth Package and Health Checkups

View More